Saturday, February 19, 2005

புதுயுகம் படைப்போம்

சுனாமி

ஆழிப் பேரலையே
அடித்ததென்ன எங்களையும்

சுனாமி எனும் பெயர்கொண்டு
பூமியில் பாதியை அழித்ததென்ன

சிக்கிவிட்ட சில்லறைபோல்
சிதறியதே சிந்தனைகள்

கொண்டுவந்த சுமைகளை
சுழுக்கெடுத்துவிட்டாய்

அப்போது எம் வேதனை தெரியவில்லையா?
இப்போது உன் கொடுமை புரியவில்லையா?

சுனாமிப் பேரலையே
சுற்றத்தைக் கொன்றதுமேன்

ஓங்கி அலையடித்து
ஊரை அழித்ததுமேன்

உறக்கம் கலையுமுன்னே
மக்கள் உயிரைப் பறித்ததுமேன்

பச்சைப் பாலகர்கள் செய்த
பாவமென்ன சொல்லு

மிச்சமேதுமின்றி
குடும்பங்கள் மறைந்தனவே

பேயாக வந்த கடலலையால்
பிணமானோம்

ஆற்ற முடியவில்லை - மனம்
ஆறாத் துயரில்
மறக்க முடியவில்லை - இன்னும்
ஈர நினைவுகள்


(நிசாந்தனின் மறைவை நினைத்து எழுதியது)

- சதீஸ்காந்தன்
(வகுப்பு 8, கதிரொளி சிறுவர் இல்லம்)
01/2005
புதுயுகம் படைப்போம்


தலை குனிந்து வாழ்ந்த பேதையை
அடக்கமெனும் ஆயுதம் கொண்டு
அடக்கிவிட்டனர் !

அன்புக்கு அடிபணிந்த மடந்தையை
அடிமைச் சங்கிலி கொண்டு
பூட்டிவிட்டனர் !

இரக்கத்திற்கு மயங்கிய பேதையை
பரிவு எனும் தடவலினால்
தட்டிவிட்டனர் !

மலர்களாய் மணம் பரப்பிய மங்கையை
மலர் நுகரும் வண்டுகளால்
அழித்துவிட்டனர் !

பூமாதேவியாய் பொறுமை காத்த பெண்களோ
கல்லறைகளுக்கு காவலாகிவிட்டனர் !

கவிதைக்கு அழகு சேர்த்த கன்னியோ
கல்யாணச் சிறைக்குள் கைதியாக்கப்பட்டனள் !

இவ்வாறு-

பெண்களின் தன்மையை
பெண்மை என்ற பெயரில்
தரம் தாழ்த்திய சமுதாயத்தை
புறம் தள்ளி
புறப்படு பெண்ணே

புது யுகம் படைத்து
அடிமைகளாக மாண்ட
மடந்தைகளின் கல்லறைகளை
முற்றுகையிடுவோம்.


- விமலசாந்தி (வகுப்பு 9)
(யோகசுவாமி மகளிர் இல்லம்)
பூவிடம் கேட்பேன்

பூவே!
மலர்ந்து வண்டுக்கு
அமிர்தம் கொடுப்பாயா?

சூரியனைக் கண்டு
பூவே சிரிப்பாயா?

தென்றல் காற்றில்
குதூகலமாய் ஆவாயா?

தேனருந்தும் வண்டுகளை
வாவென்று அழைப்பாயா?

பூவே!
எனது அப்பா அம்மா
எங்கே என்றும் சொல்வாயா?- விஸ்ணுகாந்தன் (வகுப்பு 8)
(விபுலானந்தா சிறுவர் இல்லம்)நன்றி: துளிர்

1 Comments:

At 7:41 PM, Blogger டிசே தமிழன் said...

சதீஸ்காந்தன், மதனசேகரம் போன்ற சிறுவர்களின் கவிதைகள் உருக்கமாயும், மனதை நெகிழச்செய்வதாயும் இருக்கின்றன. எதையோ கற்று, அறியவேண்டிய இந்தச்சின்னஞ்சிறார்கள் இழப்பையும், துயரத்தையும் பாடுவதாகிப்போன காலத்தை என்னவென்று சொல்வது?
ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் விமலசாந்தி இந்த வயதிலேயே யதார்த்ததின் கொடூரத்தைப் புரிந்துகொண்ட விதம் வியப்பளிக்கிறது. தொடர்ந்து எழுதச்சொல்லி உற்சாகப்படுத்தவேண்டும்.
விஷ்ணுகாந்தனின்
//பூவே!
எனது அப்பா அம்மா
எங்கே என்றும் சொல்வாயா?//
வாசிக்கும் நமக்கு இது சாதாரண சொற்களாகத்தானிருக்கும். ஆனால் அதுகொடுக்கும் பாதிப்பு அப்படியிர்ருப்பவர்களுக்குத்தான் முழுதாய் புரியும். செஞ்சோலையில் சிலநாள்கள் நின்றபோது இந்தத் துயரத்தின் சிறு துளியை அவர்களிடமிருந்து நானும் அறிந்திருக்கின்றேன்.

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Website Counter
Website Counters